பல்லடம், ஆக.26: கோவில் பூசாரிகள் நல வாரியத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோவில் பூசாரிகள் நல சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மாநில தலைவர் வாசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் வேலை பார்க்கும் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு பணியிடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கு உண்டான வழிமுறைகள், சட்ட திட்டங்கள் முறைப்படுத்தப்படாததால் 60 வயது கடந்த பூசாரிகள் பலர் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பூசாரிகளுக்கு, குடும்பநல நிதி, சந்தா, பணியிட பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அந்தந்த மாவட்ட அறநிலையத்துறை செய்து தர வேண்டும். நலவாரியம் மூலம் நலத்திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. மறைந்த பூசாரிகளுக்கு இறப்பு நிதி கூட வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும். அலுவல் சாரா உறுப்பினர்களை அரசு நியமித்து நலவாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதன் மூலம் பூசாரிகள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியும். பூசாரிகளுக்கு ஓய்வூதியம், இறப்பு நிதி ஆகியவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.