கோவில்பட்டி, செப். 1: கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடந்த ஹாக்கி பயிற்சி முகாமில் வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட அனைத்து ஹாக்கி கிளப் செயலாளர்கள் சார்பில் தேசிய விளையாட்டு தினமான மேஜர் தயான் சந்த் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக இளம் ஹாக்கி வீரர்களை உருவாக்கும் நோக்கில் ஹாக்கி பயிற்சி முகாம், கோவில்பட்டி எஸ்டிஏடி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். பிலிப்ஸ் ஹாக்கி கிளப் செயலாளர் கண்ணுசாமி, கோவில்பட்டி 11 ஹாக்கி கிளப் தலைவர் சிவக்குமார், ரத்னவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேஜிஎஸ் ஹாக்கி கிளப் செயலாளர் முருகன் வரவேற்றார். பயிற்சியாளர்களாக இந்திய வீரரும் ஒலிம்பிக் வீரருமான ஆடம் சிங்க்லர் மற்றும் முன்னாள் மூத்த வீரர் பெங்களூரு சாம்சங் ஆகியோர் பங்கேற்று பயிற்சி கொடுத்தனர். வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் செயலாளர் பசுபதி நன்றி கூறினார். பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளராக பாரதியார் கிளப் செயலாளர் சந்தனராஜ் செயல்பட்டார்.