கோவில்பட்டி, ஏப். 21: கோவில்பட்டியில் வீட்டை உடைத்து ₹3.5 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கதிர்வேல் (60). இவரது மனைவி சுந்தரி. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்குள்ள அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 5 பவுன் நகை, ₹1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இதன் ெமாத்த மதிப்பு ₹3.5 லட்சம் ஆகும். காலையில் வழக்கம்போல் எழுந்த கதிர்வேல், வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எஸ்ஐ சுப்புராஜ், தனிப்படை எஸ்ஐ மாதவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.