கோவில்பட்டி, பிப். 28: கோவில்பட்டி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்கு திட்டங்குளம் பிள்ளையார் கோயில் அருகே மது விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ராஜா (49) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (62) என்பவரை கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் எஸ்ஐ கமலாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மதுவிற்பனை செய்த தெற்கு திட்டங்குளம் கீழ காலனியைச் சேர்ந்த கனகராஜ் (52) என்பவரை கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். பைக் திருடிய 3 பேர் கைது நெல்லை, பிப். 28: நெல்லை அருகே பைக் திருடிய தூத்துக்குடியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்தை சேர்ந்தவர் தமிழரசன் (30). இவர், கங்கைகொண்டான் அருகேயுள்ள பாப்பான்குளத்தில் வல்கனைசிங் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழரசன், கடையருகே பைக்கை நிறுத்தியிருந்தார். அருகிலுள்ள நண்பரின் கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வந்தபோது பைக்கை காணவில்லை.இது குறித்து கங்கைகொண்டான் போலீசில் தமிழரசன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தாழையூத்து அருகே பைக்கை தள்ளிக் கொண்டு சென்ற 3 பேரை, ரோந்து சென்ற போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், பைக் திருடிக் கொண்டு செல்வதும், பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றதால் தள்ளிக் கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் கங்கைகொண்டான் போலீசில் ஒப்படைத்தனர்.தொடர் விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி 3ம் மைல் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மனோஜ்குமார் (22), அந்தோணி பிச்சை மகன் பிராங்கிளின் (19), தூத்துக்குடி வெங்கடாசலபுரம் அண்ணா நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து (21) என்பது தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.