தர்மபுரி, அக்.5: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் நிலையான வருமானத்திற்கு கால்நடை வளர்ப்பு மற்றும் புறக்கடை கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். புறக்கடை கோழி வளர்ப்பில் பெரும்பாலும் உள்ளூர் ரகங்களை வளர்ப்பதால் விவசாயிகளுக்கு சரியான வருமானம் கிடைப்பதில்லை. மேம்படுத்தப்பட்ட நாட்டுக்கோழி ரகங்களை சரியான தொழில்நுட்பங்களை பின்பற்றி வளர்க்கும்போது முட்டை மற்றும் இறைச்சியின் மூலம் நிலையான வருமானத்தை பெற இயலும். இவற்றை கருத்தில் கொண்டு பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் வளர்ப்பதற்கான புதிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா வரவேற்றார். தோட்டக்கலை விஞ்ஞானி இந்துமதி, பயிர் பாதுகாப்பு விஞ்ஞானி ராஜபாஸ்கர், கால்நடை ஆராய்ச்சியாளர் தங்கதுரை, உதவி பேராசிரியர் கண்ணதாசன், கால்நடை மருத்துவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.