கண்டாச்சிபுரம், ஆக. 12: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் விழுப்புரத்தில் அதிகப்படியாக 22 செ.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் 10 செ.மீக்கும் அதிகமான மழை பொழிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து கெடார் பகுதியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் கெடார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் முக்கியமாக விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கெடார் பகுதியில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு கெடார்-செல்லங்குப்பம் சாலையில் கெடார் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பழனியம்மாள் (39) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் கோழி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 4,800 கோழிகள் உயிரிழந்ததாக கோழிப்பண்ணையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கோழிகளை கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.