சிவகாசி, மே 20: வெம்பக்கோட்டை அருகே ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்த சம்பவத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருபவர் செல்லமுத்துப்பாண்டியன். இவரது கோழிப்பண்ணையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான கோழிகள் செத்து மடிந்தன. கோழிகள் இறந்ததற்கு பண்ணைக்கு வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டது தான் காரணம் என மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் செல்லமுத்துப்பாண்டியன் மீது மாரனேரி போலீசில் கல்லமநாயக்கன்பட்டி உதவி மின் பொறியாளர் கௌதம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கோழிப்பண்ணைக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து செல்லமுத்துபாண்டியனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டாததால் கோழிப்பண்ணையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அபராத தொகையை கட்டிய அன்று மாலையே மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு வழங்க சென்ற மின்வாரிய ஊழியர்கள் ஜஸ்டீன், ஆறுமுகம், உதவி மின் பொறியாளர் முத்தால்ராஜ் ஆகியோருக்கு செல்லமுத்துப்பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோழிப்பண்ணை அதிபர் செல்லமுத்துப்பாண்டியன் மீது மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.