மதுரை, ஆக. 31: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ராம்நாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து விவசாய கல்லூரி வரை மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் என மக்கள் கூடுமிடங்கள் அதிகம் உள்ளன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள் கூட குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லமுடியாத நிலை தொடர்கிறது.
இதன்படி சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தை வாகனங்கள் கடக்க சுமார் அரைமணி நேரம் வரை ஆகிறது. எனவே, மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி வரை பறக்கும் பாலம் கட்டுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், மனுதாரர் கோரிக்கைப்படி பாலம் அமைக்கும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.