ஊட்டி: தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பூங்கா பராமரிப்பு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் 800க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 300 பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தற்காலிக பணியாளர்களே உள்ளனர். மேலும், நிரந்தர பணியாளர்களுக்கும் இதுவரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பலரையும் இதுவரை நிரந்தரம் செய்யாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆண்டிற்கு பல கோடி ரூபாயம் வருவாய் ஈட்டித்தரும் பூங்காக்களில் பணியாற்றி வரும் இவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவப்படி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ேடன்ஹோடா பண்ணை பணியாளர்களை தமிழ் நாடு அரசு நிதித்துறை ஆணை எண் எம்.எஸ். எண் 287ன்படி பண்ணை பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பூங்கா பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியார்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள் நேற்று முன்தினம் தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அரசு அதிகாரிகள் யாரும் அவர்களை சந்தித்து எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தப்படாத நிலையில், நேற்று மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஏஐடியுசி., மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை வகித்தார். ஏஐடியுசி., தொழிற்சங்கத்தை சேர்ந்த கருணைராஜ், மோகன்குமார், வாசு, ரமேஷ், பொருளாளர் உண்ணிகிருஷ்ணன், சிவக்குமார், ராஜா, சீனிவாசன், சிவசங்கர், ஆன்ந்தன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். கோடை சீசன் நெருங்கிய நிலையில், அனைத்து பூங்காக்களிலும் மேம்பாட்டு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. பூங்கா மற்றும் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவைகள் நாள் தோறும் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பராமரிப்பு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது….