ஈரோடு: ஈரோடு கோட்டை பெருமாள்(கஸ்தூரி அரங்கநாதர்) கோயில் பட்டாச்சாரியரை மிரட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு கோட்டை பகுதியில் ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இதில், கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் பட்டாச்சாரியரை திருவரங்கன் அடியார் கூட்டத்தை சேர்ந்த கணபதி, ஹரியும் நவராத்திரி விழாவை நடத்த இணைய தளத்தில் நன்கொடை தலைப்பில் ரூ.300 செலுத்தி, கோயிலில் அனந்த கிருஷ்ணன் என்ற பட்டாச்சாரியரிடம் நவராத்திரி முதல் நாள் பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆனால், பட்டாச்சாரியர் வழக்கத்தில் இல்லாத பூஜை நடைமுறை என்பதால், அவர் மறுத்து விட்டார். இதையடுத்து கணபதி, ஹரியும், பட்டாச்சாரியரை மிரட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் கயல்விழி ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவரங்கன் அடியார் கூட்டத்தை ஹரி, கணபதி இருவர் மீதும் மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.