பழநி, ஜூன் 5: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பெரியகலையம்புத்தூர் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு இவ்விழா கடந்த மே 23ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கடந்த ஜூன் 2ம் தேதி பக்தர்கள் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் பூக்குண்டத்திற்கு பூ வளர்க்கப்பட்டது. நேற்று பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், பூவோடு எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், அலங்கார ரத ஊர்வல நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று கொடி இறக்குதலுடன் விழா நிறைடைகிறது.