சென்னை, அக்.23: மீஞ்சூர் அருகே உள்ள பெருமாள் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதில் பெண்கள் உட்பட 25க்கும் ேமற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் பகுதியில் வேணுகோபால் சுவாமி கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் 5ம் வார திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, ஊரில் உள்ள தெருக்கள் வழியாக, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக, குளக்கரை பகுதியில் வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சாமி கோயிலுக்கு முன் வந்து நிறுத்தப்பட்டது. அப்போது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடி இருக்கும் இடத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி, அங்கிருந்த பக்தர்கள் மீது விழுந்தது. இதில் பயந்துபோன பக்தர்கள் நாளாபுறமும் ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓடும்போது, ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உடனடியாக, 108 அம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 3 அம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, தலைமை மருத்துவர் முகமது அசேன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்க முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக காலை 6.30 மணிக்கு 3 அம்புலன்ஸ்கள் மூலம் சதீஷ் (16), கோகுல் (16), சுரேஷ் (34), எழிலரசன் (18) பொன்மலை செல்வன் (37) சாமுண்டீஸ்வரி (20), பிரபாவதி (17) ஆகியோர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள், 30 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேற்று ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களை அழைத்து உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். மீஞ்சூர் திமுக முன்னாள் நகர் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.