தேவதானப்பட்டி, மே 18: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் செயல் அலுவலராக வேலுச்சாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். காமாட்சியம்மன் கோயிலைச்சுற்றி அதிகளவில் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் இருந்தன. இந்நிலையில் கோயில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். ஆனால் மீண்டும் அதே இடத்தில் கடைகளை அமைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட இடத்திற்கு கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் கோயில் அலுவலர்கள் சென்றனர்.
அப்போது தேவதானப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவர் செயல் அலுவலர் வேலுச்சாமியை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து, கீழே கிடந்த கட்டையை எடுத்து அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த செயல் அலுவலர் வேலுச்சாமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து வேலுச்சாமி இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.