கிருஷ்ணகிரி, செப்.6: கெலமங்கலம் அருகே பூட்டை உடைத்து கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே காருகொண்டப்பள்ளி கிராமத்தில் கருத்தம்மாள் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக சீனிவாஸ் என்பவர் உள்ளார். கடந்த 31ம் தேதி இரவு பூஜைகளை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றார். மறுநாள் கோயிலுக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு சீனிவாஸ் திடுக்கிட்டார். உள்ளே சென்றுபார்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 8கிராம் நகை மாயமாகியிருந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஊர்மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, கிராம மக்கள் நேற்று முன்தினம் கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயிலுக்குள் புகுந்து நகை கொள்ளை
previous post