சின்னமனூர், ஜூன் 16: சின்னமனூர் அருகே, கோயிலில் சுவாமி சிலைகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, சீலையம்பட்டி-கோட்டூர் சாலையில் செல்லாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக சீலையம்பட்டியைச் சேர்ந்த பொன்னையா (55) என்பவர் உள்ளார். இந்நிலையில், கார்த்திக் என்பவர் வேண்டுதல் நிறைவேறியதால், 4 அடி உயரத்தில் கருப்பசுவாமி சிலை, 2 அடி உயர விநாயகர் கற்சிலைகளை வழங்கினார். இதில், விநாயகர் சிலை கோயில் நுழைவு வாயிலிலும், உள் பகுதியில் கருப்பசாமி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை பூசாரி கோயிலுக்கு சென்று பார்த்தபோது, கருப்பசுவாமி மற்றும் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து பொன்னையா கொடுத்த புகாரின் பேரில், சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோயிலில் சுவாமி சிலைகள் திருடு போனது சின்னமனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.