அண்ணாநகர், அக்.23: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூ மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை, ஏராளமானோர் குவிந்தனர். இந்நிலையில், பழம் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து திடீரென கரும்புகை வருவதை கண்ட பொதுமக்கள், அந்த கார் யாருடையது என அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் அந்த கார் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே இதுபற்றி கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால், கோயம்பேடு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. போலீசார் விசாரணையில், சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த பழ வியாபாரி இளவரனின் கார் என்பதும், இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.