களியக்காவிளை, ஆக.7: குமரி மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்குதல் பரவாமல் தடுக்க படந்தாலுமூடு பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க கேரள அரசு பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்திலும் பரவ வாய்ப்பு உள்ளதாக கருதி, கோமாரி நோய் பரவுவதை தடுக்கும் விதமாக கேரள தமிழக எல்லைப்பகுதியான களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் கன்றுகாலிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பவும், இதர வாகனங்களை கிருமிநாசினி தெளித்து குமரி மாவட்டத்தில் அனுமதிக்கும் வகையிலும் இந்த சோதனைச்சாவடி அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கால்நடைத்துறை குமரி மாவட்ட மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன் உத்தரவின்படி, தக்கலை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எட்வர்ட் தாமஸ், கால்நடை நோய் புலனாய்வு உதவி மருத்துவர் சந்திரசேகர், உதவி மருத்துவர்கள் பிரமோத் டால்பின், பெனடிக்ட், ஆய்வாளர் ராஜீவ் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மேல்புறம் முஞ்சிறை ஒன்றிய கிராம பகுதிகளில் கோமாரி நோயின் தாக்கம் உள்ளதா? எனவும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த சோதனைச்சாவடி சுமார் 90 நாட்கள் தொடர்ந்து செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கன்றுகாலிகள் ஏதேனும் நோய் தாக்குதலுக்கு உள்ளானால், அருகில் உள்ள கால்நடைத்துறை மருத்துவமனைக்கு தகவல் அளித்திடுமாறு விவசாயிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.