கோவை,நவ.16:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டு வரும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரால், பேரூராட்சி தேர்தலில் நின்று கூட வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கோவை குனியமுத்தூரில் நடைபெற்றது. அப்போது ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி அடுத்த மாதம் 6ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள் அமைப்புகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.