தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள சாலைகள் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமலும், கோபுரராஜபுரம் பெருமாங்குடி சாலையில் உள்ள மின்விளக்குகள் 6 மாத காலமாக எரியவில்லை. மேலும் ஊராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றபடாமல் கிடப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிராமப் பகுதிகளில் பழுதடைந்து காணப்படும் குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும். பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதாகவும், வளைந்து காணப்படும் பழைய மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைத்திட வேண்டும். எனவே மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கிராம மக்களுக்கு குடிநீர் வசதி சாலை வசதி மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.