பள்ளிகொண்டா, ஜூலை 6: பள்ளிகொண்டாவில் உள்ள வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரத்தில் வைக்கப்படும் கலசத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், வேலூர் அப்பாஜி சாமி, மோகானந்த சுவாமிகள் பங்கேற்று கலசாபிஷேகம் நடத்தினர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகே ராமாபுரம் செல்லும் சாலையில் த்ரீஸ்தலம் ஆதி வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கருவறையில் 16 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அன்னை ஆதி வாராஹியின் மஹா கும்ப கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் இன்று 9.30 மணியளவில் நடக்கிறது.
அதனை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு மஹா ஜலவாராஹி யாகம் தொடங்கி அபிஷேக, ஆராதனைகள் மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மஹா அக்னி வாராஹி யாகம் நடந்தது. அதனையடுத்து மாலை 6 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில், வேலூர் அப்பாஜி சுவாமி, சித்தஞ்சி சிவகாளி பீடம் பீடாதிபதி மோகானந்த சுவாமி ஆகியோர் கலந்து கொண்டு கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். இதில், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட எஸ்பி மதிவாணன், பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபபிரியாகுமரன், துணைத்தலைவர் வசீம் அக்ரம், நகர செயலாளர் ஜாகீர் உசைன் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.