கோபி, ஜூன் 7: கோபி பெரியார் திடலில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டை காலி செய்ய வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். கோபி நகரின் மையப்பகுதியான பெரியார் திடல் எதிரே சுமார் 100 ஆண்டுகளாக தினசரி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த மார்க்கெட் கட்டிடங்களை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் அமைக்க கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மார்க்கெட்டிற்கு எதிரே இருந்த வருவாய்த்துறைக்கு சொந்தமான பெரியார் மைதானத்தை தற்காலிகமாக மார்க்கெட்டாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுமான பணிகள் முடிவுற்று கடந்த மாதம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, வணிக வளாகத்தில் பெருமளவு பணிகள் முடிக்கப்பட்டது. பெரியார் மைதானத்தில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டை காலி செய்ய வருவாய்த்துறையினர் கடை உரிமையாளர்கள் 164 பேருக்கும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். நகரில் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு என உள்ள ஒரே இடம் பெரியார் மைதானம் மட்டுமே. சுமார் 100 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பயன்படுத்தி வரும் பெரியார் திடலை மீண்டும் மைதானமாகவே செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தினசரி மார்க்கெட்டை வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர்.