கோபி, ஆக.13: கோபியில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதி்நவீன அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர், கிராமப்புற ஏழை கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒன்றிய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நவீன நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைத்து வருகிறது.
ஈரோடு மாவட்ட அளவில் அறிவுசார் மையம் மற்றும் நவீன இணையதள வசதியுடன் கூடிய நூலகம் அமைக்க கோபி நகராட்சி தலைவர் நாகராஜ் பெரும் முயற்சி மேற்கொண்டார். இதற்காக, நகரின் மையப்பகுதியில் கோபி மட்டுமின்றி சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், தாளவாடி, நம்பியூர், பெருந்துறை மட்டுமின்றி அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட குன்னத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் எளிதில் வந்து செல்லக்கூடிய பகுதியாக கோபி இருப்பதையும், தற்போது அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் நகரின் மையப்பகுதி என்பதையும், அருகில் தினசரி மார்க்கெட் உள்ள நிலையில், அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வணிக வளாகம் அமைத்தால் நகராட்சிக்கு மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்ற நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும் என்பதால் பெரும் முயற்சி மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, அப்போதைய நகராட்சி ஆணையாளராக இருந்த பிரேம் ஆனந்த் மற்றும் நகராட்சி ஆகியோரின் கடும் முயற்சியினால் ஈரோடு மாவட்ட அளவில் அறிவுசார் மையம் கோபியில் அமைக்க அரசு உத்தரவிட்டது. முதல்கட்டமாக, ரூ.1.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதிவேக இணையதள வசதி, தடையற்ற மினசாரம் வழங்க பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜெனரேட்டர் வசதி, ஒரே நேரத்தி்ல் 200 பேர் வரை பயற்சியில் கலந்து கொள்ளும் வகையில் கான்பிரன்ஸ் ஹால் வசதி என விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவுற்றது. இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக இந்த அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
பின்னர் கோபி நகராட்சி தலைவர் நாகராஜ் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கோபி நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி, மாவட்ட திட்டகுழு உறுப்பினர் விஜய் கருப்புசாமி, பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், சுகாதார அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சவுந்திரராஜன், நிருபன் சக்கரவர்த்தி, நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன், நகராட்சி மேலாளர் ஜோதிமணி, நகராட்சி துணைத்தலைவர் தீபா, கவுன்சிலர்கள் குமார சீனிவாசன், ரேவதி தம்பான் உள்ளிட்டோரும், ஆல் டிரேடர்ஸ் அசோசியேஷன் தலைவர் வேலுமணி, தாமு செட்டியார் நகை மாளிகை உரிமையாளர் சேகர், பிகேஆர் மகளிர் கல்லூரி மாணவிகள், அரசு பள்ளி மாணவ, மணவியர் கலந்து கொண்டனர்.