ஈரோடு, ஆக. 21: கோபியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் வெங்கடேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் கோபியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க உதிரி பாகங்கள் பொறுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டு, ஈரோடு மாவட்டத்தில் 11ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் விலையில்லா சைக்கிள்களை வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஆணையர் வெங்கடேஷ், கோபியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் தங்கியுள்ள மாணவ-மாணவிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என சோதனை செய்து சரியான வேளைகளில் உணவினை முறையாக வழங்க விடுதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடா்ந்து, ஈரோடு மாணவ-மாணவிகளிடம் இருந்து பள்ளி மேற்படிப்பு பயில உதவி தொகை கோரி புதுப்பித்தவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக பரிசீலனை செய்திட கல்லூரி மற்றும் பள்ளி தொடர்பு அலுவலர்கள் உதவியுடன் முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பிற்படுத்தப்பட்டோர் நல பிரிவை சார்ந்த அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.