நெல்லை,ஜூன் 24: கோபால சமுத்திரத்திலேயே வீடுகளை கட்டி தரக்கோரி இலங்கை தமிழர் மறுவாழ்வு மக்கள் நேற்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தனர். நெல்லை அருகே கோபாலசமுத்திரம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டரிடம் அளித்த மனு: கோபாலசமுத்திரம் முகாமில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட நபர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் அரசு கட்டித் தரும் புதிய வீடுகளை, நாங்கள் இப்போது இருக்கும் கோபாலசமுத்திரத்திலேயே கட்டித் தரும்படி கேட்டிருந்தோம். அதன்படி அங்கேயே வீடு கட்டித் தருவார்கள் என்று நம்பியிருந்தோம்.
ஆனால் தற்போது இந்த இடத்தில் இல்லாமல் திருவிருந்தான்புள்ளி என்ற ஊரின் மலையடிவார பகுதியில் புதிய வீடுகள் கட்டித் தர சேரன்மகாதேவி தாசில்தார் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த பகுதியில் ஆயத்த வேலைகள் நடைபெறுவதை அறிந்தோம். நாங்கள் இருக்கும் பகுதியே வீடுகள் வசதி இல்லாவிட்டாலும், பள்ளி, மருத்துவமனை செல்வதற்கும், வேலைவாய்ப்புக்கும் ஏற்றதாக உள்ளது. மேலும் பெண்கள் ஓலை முடைதல் உள்ளிட்ட வேலைகள் மூலம் பணம் ஈட்டி வருகின்றனர். எனவே நாங்கள் தற்போது இருக்கும் கோபாலசமுத்திரம் பகுதியிலேயே புதிய வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.