கோத்தகிரி, ஜூன் 25: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த வாரங்களில் பெய்த மழையின் காரணமாக பசுமையாக காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களில் மகசூல் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் காரணமாக தேயிலை மகசூல் குறைந்து காணப்பட்டது.
இதனால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், உரிய விலை கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஆனால் கடந்த மாதங்களில் பெய்த மழை மற்றும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக தேயிலை உற்பத்தி பாதிக்காத அளவில் போதிய தண்ணீர் பற்றாக்குறை தீர்ந்து தற்போது தேயிலை தோட்டங்கள் பசுமை நிலைக்கு மாறியுள்ளது. தேயிலை தோட்டத்திற்கு ஏற்ற தட்பவெப்பநிலை நிலவி வருவதால் வரும் காலங்களில் மகசூல் அதிகரிக்கும் என தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.