கோத்தகிரி, ஜூன் 28: கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடத்தின் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி தினசரி மார்க்கெட் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளில் பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே கடைகளை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் நலன் கருதி மார்க்கெட் உள்புறம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென கட்டணமில்லா கழிப்பிடமும், மார்க்கெட்டுக்கு வெளியே கட்டண கழிப்பிடமும் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்க்கெட் உள்புறம் அமைந்துள்ள கழிப்பிடத்தில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டதால், பராமரிப்பு பணிக்காக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் கழிப்பிடத்தை பூட்டி வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இதுவரை பணிகள் முற்றிலுமாக நிறைவு பெறாததால், வியாபாரிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் விரைந்து கழிப்பிட பராமரிப்பு பணிகளை நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.