கோத்தகிரி, ஜூலை 2: கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்ப்பட்டு உள்ளது. கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர், உதகை நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, காந்தி மைதானம் மற்றும் பேருந்துகள் செல்லும் பிரதான சாலைகளில் சமீப காலமாக வளர்ப்பு கால்நடைகள் சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதனால், அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கால்நடைகள் குன்னூர், உதகை செல்லும் நெடுஞ்சாலையில் உலா வரும் போது இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்ப்பட்டு உள்ளது. மேலும் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் சில நேரங்களில் கீழே விழுக்கூடிய நிலை ஏற்ப்பட்டு உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலா வரும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.