கோத்தகிரி, மே 8: கோத்தகிரியில் 12-வது காய்கறி கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் சுழற்கோப்பை மற்றும் சிறப்பு பரிசுகளை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வழங்கினார். கோத்தகிரியில் கோடைவிழாவின் முதல் நிகழ்ச்சியாக நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதனை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். நிறைவு விழாவான நேற்று வீட்டு காய்கறி தோட்டம் மற்றும் காய்கறி காட்சி போட்டிகளில் கலந்து கொண்டு காட்சி அரங்குகள் அமைத்து வெற்றி பெற்ற 9 விவசாயிகளுக்கு சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது.