கோத்தகிரி, மே 28: கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலை தோட்டம் பகுதியில் புலி உலா வந்ததால் பொதுமக்களிடம் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வன விலங்குகள் கிராமப்பகுதிகளுக்குள் உலா வரத்தொடங்கி உள்ளன. அவ்வாறு கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிகள், சாலைகள், தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கட்டபெட்டு அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி தேயிலை தோட்டம் வழியாக தனியார் குடியிருப்பை கடந்து சென்றுள்ளது.
இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.