சேலம், ஜூலை 8: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடப்பாண்டு ஆடித் திருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர். சேலத்தில் பழமைவாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயிலில், ஆடித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான திருவிழா அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நியமனக்குழு தலைவர் முருகன், செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, கோட்டை மாரியம்மன் முன்பு முகூர்த்தக்காலிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்களின் கோஷம் முழங்க, கோயில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனை முன்னிட்டு, கோட்டை மாரியம்மனுக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டுச் சென்றனர். நடப்பாண்டு வரும் 23ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்குகிறது. 24ம் தேதி காலையில் கொடியேற்றமும், 30ம் தேதி இரவு கம்பம் நடுதல் மற்றும் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
5ம் தேதி இரவு சக்தி அழைத்தல், 6ம் தேதி காலையில் சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சிகளும், விழாவின் முக்கிய நிகழ்வாக 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 3 நாட்களுக்கு, பொங்கல் வைத்தல் ைவபவமும், உருளுதண்டம் போடும் நிகழ்வும் நடக்கிறது. 11ம் தேதி சத்தாபரணம், 12ம் தேதியன்று மஞ்சள் நீராட்டு, 13ம் தேதி பால்குட ஊர்வலத்துடன் ஆடித்திருவிழா நிறைவு பெறுகிறது. முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில், அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார், கட்டளைதாரர் சுரேஷ்பாபு-விஜயலட்சுமி, கோபிநாத் மற்றும் அதிகாரிகள், பூசாரிகள், கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.