திருமயம்,ஆக.17: திருமயம் அருகே ஆடி கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு கோட்டையூர் வீரமாகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியில் திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோட்டையூர் வீரமாகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முதல் விளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. விளக்கு பூஜை நிகழ்ச்சியானது மாலை 5 மணி அளவில் தொடங்கிய நிலையில் பல்வேறு வகையான ஹோமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட பெண்கள் வீட்டில் இருந்து தாம்பூலம், குத்து விளக்குகளுடன் வந்த நிலையில் விழா கமிட்டியினர் விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜை பொருட்கள், விளக்கு எண்ணெய் உள்ளிட்ட பூஜை பொருள்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து சரியாக 7 மணி அளவில் விளக்கு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களும் ஒரே நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
இவ்வாறு விளக்கேற்றி அம்மனை வழிபடுவதன் மூலம் விவசாயம் செழித்து, உலகில் அமைதி நிலவி, குடும்பத்தில் உள்ளவர்களின் நோய் நீங்க நலமுடன் வாழ்வதாக கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் வீரமாகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்ததோடு விழாவில் கலந்து கொண்ட பெண்கள் அர்ச்சனை செய்து அம்மனை பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.