ஊட்டி, ஜூன் 3: ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலில் இருந்து உள்ளூர் மக்கள் விடுபட்டுள்ளனர். கோடை சீசனை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதனால், லாட்ஜ், காட்டேஜ்கள், ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் கூட்டதால் நிரம்பி வழிந்தன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை காணப்பட்டது. காட்டேஜ் மற்றும் லாட்ஜ் அறைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. விலையேற்றப்பட்டதாலும், போக்குவரத்து நெரிசாலாலும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அவதிக்குள்ளாகினர். பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் வாகனங்களால் பிசியாக இருந்த ஊட்டி சாலைகளில் நேற்று வாகன நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது. அதேபோல், பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. சீசன் முடிந்து இரு நாட்களே ஆகும் நிலையில், ஓட்டல் மற்றும் காட்டேஜ்களில் அறைகளின் கட்டணங்களை உரிமையாளர்கள் குறைத்து விட்டனர். கடந்த இரு மாதங்களாக ஒரு அறைக்கு ரூ.3 ஆயிரத்திற்கும் மேல் வசூலித்து வந்த நிலையில், நேற்று கட்டணம் குறைக்கப்பட்டது.
ரூ.1500 முதல் 2 ஆயிரம் வரை மட்டுமே வசூலிக்கின்றனர். இன்று முதல் மேலும் இது குறைய வாய்ப்புள்ளது. ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் குறைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் அனைத்து இடங்களுக்கும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்காமலும், சுற்றிக்கொண்டு செல்லாமல் நேரடியாக சென்று வர முடிவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.