ஈரோடு,ஜூன்3: ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, அரசின் சார்பில் இலவச பாட புத்தகங்கள்,நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவடைந்து,நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, மாநிலம் முழுவதும் நேற்று அனைத்து பள்ளிகளிலும் முதல் பருவ வகுப்புகள் தொடங்கின.முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் கடந்த சில நாட்களாகவே தூய்மை பணி செய்யப்பட்டு,தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்,நகரவை,நலத்துறை மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.கோடை விடுமுறைக்கு பிறகு மாணவ-மாணவிகள் சீருடைகள் அணிந்து உற்சாகமாக பள்ளிக்கு வந்திருந்தனர்.மாணவ-மாணவிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தன. 1ம் வகுப்புக்கு முதன் முதலாக வரும் மாணவ-மாணவிகளுக்கு சாக்லேட் போன்ற இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டன. பாட புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கல்: தமிழக அரசின் சார்பில் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்க உத்தரவிட்டிருந்தது.இதன்காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இலவச பாட நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று பள்ளிகள் திறந்து வகுப்புகள் துவங்கியதும்,அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாட நோட்டுகள்,பாட புத்தகங்கள்,கல்வி உபகரணங்கள் மற்றும் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு சீருடை போன்றவையும் வழங்கப்பட்டது.மாணவ-மாணவிகள் பாட புத்தகங்களை பெற்றதும், வகுப்பறைகளில் தங்களது புத்தகங்களை ஆர்வமுடன் புரட்டி என்னென்ன பாடங்கள் உள்ளது என பார்வையிட்டனர். முதல்வரின் காலை உணவும் வழங்கல்: தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளான நேற்றே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மீண்டும்தொடங்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, இத்திட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.