தர்மபுரி, ஜூன் 2: தர்மபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளி திறந்தவுடன் 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும், சுமார் 1.75 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடநூல், நோட்டுப்புத்தகம், சீருடைகள் இன்றே விநியோகம் செய்யப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகா பகுதிகளில், 1575 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில், தர்மபுரி, அரூர் தொடக்க கல்வி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் 1165 உள்ளன. இதில், சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தர்மபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 647 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 518 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் மாதம் திறக்கப்படுகிறது.
பள்ளி திறக்கும் நாள் அன்று, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடநூல்கள் வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகள் திறக்கும் நாள் அன்று 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான வழங்கப்பட வேண்டிய இலவச பாடபுத்தகங்கள், அந்தந்த பள்ளிகளில் விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகள் திறந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடநூல்கள், நோட்டு புத்தகம், சீருடைகள் வழங்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பையொட்டி, பள்ளிகள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றும்பணி நடக்கிறது. பள்ளி வகுப்பறைகள் தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தர்மபுரி, அரூர் தொடக்கக் கல்வி மாவட்டம் என 2 உள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை தர்மபுரி ஒரே கல்வி மாவட்டம் தான். தர்மபுரி முதன்மை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதிபள்ளி, ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக, அனைத்து பாடத்திட்டங்களுக்கான புதிய புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இந்த புத்தகங்கள் பள்ளிகளில் உள்ள தனித்தனி அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
அதே போல், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும், இலவச பாடபுத்தகம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகள் திறக்கப்படுவதால் தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து போலீசார் முக்கிய இடங்களில் நிறுத்தப்படுகின்றனர். குறிப்பாக தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் போலீசார் நிறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 1575 பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 1.75 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து பள்ளிகளிலும், கடந்த ஏப்ரல் மாதம் கோடைகால விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து, இன்று (2ம் தேதி) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது,’ என்றனர்.