திண்டுக்கல், ஜூன் 3: திண்டுக்கல் மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனை அடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர். திண்டுக்கல்லில், நேற்று காலை பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் புதிய சீருடைகளை அணிந்து புத்துணர்ச்சியுடன் வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து, பூக்களை தூவி, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். அதேபோல் முதன் முதலில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், குழந்தைக்கு புத்தாடை அணிவித்து பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
சில பெற்றோர் பள்ளி முன்பு நின்று தங்கள் குழந்தையுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையே கோடை விடுமுறைக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் அவற்றை பெற்றுக்கொண்டனர்.