மாமல்லபுரம்: மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலாத் தலமாக திகழ்வதால், தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால், மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், கோடை விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தங்களது குடும்பத்துடன் பயணிகள் பலர் அரசு பேருந்து, தனியார் பேருந்து, வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாமல்லபுரத்தில் குவிந்தனர். இவர்கள், வருகையால் வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி களைகட்டி காணப்பட்டது.
தொடர்ந்து, புராதன சின்னங்களை கண்டு ரசித்து குடும்பம், குடும்பமாக நின்று செல்பி மற்றும் குழுப் புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும், வெயில் சுட்டெரித்தால் வெயிலில் இருந்து தப்பிக்க ஏராளமானோர் கடற்கரையில் குவிந்து, கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர். அப்போது, தள்ளுவண்டி வியாபாரிகள் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டதை காண முடிந்தது.
சுற்றுலாப்பயணிகள் கொண்டு வந்த வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாததால், ஆங்காங்கே சாலையை மறித்து நிறுத்தினர். இதனால், கிழக்கு ராஜவீதி, தென் மாட வீதி, கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலை, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, டிராபிக் போலீசார் விரைந்து வந்து வாகனங்களை மாற்று வழியில் வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.