காரைக்கால், ஜூன் 3: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலுக்கு தினம்தோறும் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வர். சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மற்றும் கோடை விடுமுறை என்பதால் திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
முன்னதாக நளன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடி கலிதீர்த்த விநாயகரை வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்தனர். பின்னர் மூலவர் தர்பாரண்யேஸ்வரர், அனுகிரக மூர்த்தி சனிபகவானை தரிசித்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று வழிபாடு நடத்தியதால் கோயிலில் கூட்டம் அலைமோதியது.