திருவண்ணாமலை, ஜூன் 3: திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை துணை சபாநாயகர் வழங்கினார்.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து, திட்டமிட்டபடி பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சுமார் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பு நண்பர்களையும், ஆசிரியர்களையும் பார்த்ததும் உற்சாகம் அடைந்தனர். மேலும், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு பூச்செண்டு, இனிப்பு, சாக்லெட் போன்றவற்றை கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும், முதல் நாளன்றே மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்க கூட்டம் முடிந்ததும், பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். மேலும், அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி, மாணவர்கள் சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு போதுத் தேர்வு ேதர்ச்சி சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டும் உயர வேண்டும். அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்ேவறு திட்டங்களை செயல்படுத்துகிறார். குறிப்பாக, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்றவை பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்றார். நிகழ்ச்சியில், எம்பி சி.என்.அண்ணாதுரை, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மூத்தோர் தடகளச்சங்க மாநில துணைத் தலைவர் கார்த்திவேல்மாறன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டிவிஎம் நேரு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் நேரடி மேற்பார்வையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் பள்ளிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்று, மாணவர்களின் வருகை விபரம், பாடப்புத்தகங்கள், சீருடை வழங்குதல் மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குதல் போன்றவற்றை பார்வையிட்டு உறுதி செய்தனர்.