கிருஷ்ணகிரி, ஜூன் 2: கோடை விடுமுறைக்கு பின்பு இன்று(2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 459 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் நடத்தப்பட்டு வரும் நலப்பள்ளிகளில், 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் இலவச பாடப்புத்தகம், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட குறிப்பேடுகள்(நோட்டுகள்) வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பின்பு இன்று(2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான இன்று(2ம் தேதி) அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பாடப்புத்தம், நோட்டுகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதலே, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கன்டெய்னர் லாரிகள் மூலம் பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வந்து சேர்ந்தது. தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பாடப்புத்தக கிடங்களில் இறக்கி வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, கடந்த 10 நாட்களாக தேவையான பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தங்கள், புத்தக கிடங்கில் இருந்து தனியார் வாகனங்கள் முலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 459 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேவையான 17 வகையான பாடக்குறிப்பேடுகள்(நோட்டுகள்) அனுப்பி வைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், தற்போது படித்து வரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கேற்ப, பாட குறிப்பேடுகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து கல்விததுறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த ஆண்டு 459 பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகமும், இலவச பாட குறிப்போடுகளும் வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளான இன்று(2ம் தேதி) அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பாடப்புத்தகம், பாடக்குறிப்போடுகள் ஆசிரிய, ஆசிரியைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் தனியார் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.