Thursday, May 1, 2025
Home » கோடை மழை என்ன செய்யும்?!

கோடை மழை என்ன செய்யும்?!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்Summer Wellness‘‘அதிகமான வெப்பத்தில் தவித்துப்போய் இருக்கும் நமக்கெல்லாம் கோடை காலத்தில் பெய்யும் மழை என்பது பெரும் ஆறுதலான விஷயம்தான். ஆனால், அதிலும் சில தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த திடீர் தட்ப வெப்ப மாறுபாட்டின் காரணமாக நமக்கு பல்வேறு நோய்கள் வரக்கூடும்’’ என்கிற பொது நல மருத்துவர் சங்கர் அவற்றிற்கான; தீர்வுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே விளக்கிச் சொல்கிறார். கோடை சமயத்தில் மழை என்பது மழைக்காலத்தில் பெய்யும் மழையைப் போல அதிகப்படியான மழையாக இருக்காது. குறைந்த அளவு மழைதான் பெய்யும். நல்ல கோடை சமயத்தில் வெப்பம் அதிகரித்திருக்கும் அந்த வேளையில் பெய்யும் இந்த குறைவான மழையினால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். அதே சமயம் அதிகப்படியான அந்த வெப்பமும் குறையாது. திடீரென்று ஏற்படும் இந்த தட்ப வெப்ப மாறுபாட்டால் நமக்கு சில நோய்கள் உண்டாகும். இந்த சமயத்தில் சூரிய வெளிச்சம் படும்படி வெய்யிலில் வெளியில் பயணம் செய்ய நேரும்போதோ, வெயிலில் வேலை செய்ய நேரும்போதோ(கட்டிடம் கட்டும் வேலை போன்ற வேலைகள்), வெப்பமான இடங்களில் அதாவது மோட்டார் ரூம் போன்ற இடங்கள், அதீத வெப்பத்தை வெளிப்படுத்தும் இயந்திரங்கள் இருக்கும் இடங்களில் வேலை செய்யும்போதோ இந்த திடீர் வானிலை மாறுபாட்டால் உடலில் வியர்வை அதிகரிக்கும். அதிக வியர்வையால் உடலில் நீர்ச்சத்து மற்றும் சோடியம் போன்ற உப்புச்சத்து இழப்பு ஏற்படும். இதனால் உடல் பலவீனம், வாந்தி, தலைச் சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இவற்றை தவிர்க்க அதிக தண்ணீர் அருந்த வேண்டும். உப்புக்கலந்த மோர் அல்லது இளநீர் போன்ற பானங்களை அருந்த வேண்டும்.கிளறிவிடப்பட்ட இந்த உஷ்ணத்தின் காரணமாக உடலில் வேர்க்குரு மற்றும் உஷ்ணக்கட்டிகளும் ஏற்படலாம். இதற்கு வேர்க்குரு பவுடர் போன்றவற்றை பயன்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் ஏற்படும் அதீத வியர்வையால் பங்கல் இன்பெக்ஷன் ஏற்படலாம். காற்றில் இருக்கும் அதிக ஈரப்பதத்தால் வியர்வை ஆவியாகாது. இதனால் பிசுபிசுப்பாகும். வியர்வைகள் தங்கும் உடலின் மடிப்புகளில் அதாவது இடுப்புப்பகுதி, அக்குள் பகுதி, கழுத்துப் பகுதி, வயிற்று மடிப்பு பகுதிகள் மற்றும் தொடை இடுக்குகளில் படர் தாமரை, வெண் தேமல் போன்ற பூஞ்சைத் தொற்று (பங்கல் இன்பெக்ஷன்) ஏற்படலாம்.எனவே அந்த இடங்களை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். உள்ளாடைகளும் பருத்தித் துணியாக இருப்பது அவசியம். வியர்வை தங்கும் மடிப்பு பகுதிகளில் ஆண்டி பங்கல் பவுடர் போட்டு உலர்வாக வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் வெறும் தட்பவெப்ப மாறுபாட்டின் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்னைகள்தான். ஆனால், இந்த சூழ்நிலை மாறுதலால் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற காரணங்களால் மேலும் பல நோய்கள் ஏற்படலாம். இந்த கோடை காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பெய்யும் குறைந்த அளவு மழையின் காரணமாகக் கூட நீர்நிலைகளில் உடனடியாக கொசுப்பெருக்கம் ஏற்படும். குப்பைக் கூளங்களால் அடைந்து கிடக்கும் நீர்நிலைகளில் இந்த குறைந்த அளவு மழையின் காரணமாக நீர்நிலைகள் மேலும் அசுத்தமாகும். (அதிக அளவு மழை பெய்தால் அந்த குப்பைக் கூளங்கள் அடித்துச் செல்லப்படும்) இதனால் குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் கொசுக்கள் உட்காருவதால் அவற்றில் வைரஸ் பெருக்கம் ஏற்படும். வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நீரை பருகுவதாலோ, உணவை உட்கொள்வதாலோ மஞ்சள் காமாலை எனப்படும் ஹெபடைட்டீஸ் ஏ ஏற்படலாம். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம்.இருமல், தும்மல் போன்றவற்றால் காற்றின் மூலமாக அடுத்தவருக்கு வேகமாகப் பரவும் வைரஸ்களின் காரணமாக Pharyngitis எனப்படும் நோய்த்தொற்று ஏற்படும். இதனால் தொண்டை வலி, தொண்டைப்புண், எரிச்சல் போன்றவை ஏற்படும். சிலருக்கு வைரல் இன்பெக்ஷனால் ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், கை கால் வலி போன்றவை ஏற்படும். வீட்டு மருத்துவம் செய்தாலே ஒரு வாரத்தில் இவை குணமாகிவிடும். அதிகமாக இருந்தால் மருத்துவரைப் பார்க்கலாம். வைரஸ் நுண்ணுயிரி தொற்றுகளால் மெட்ராஸ் ஐ (Conjuctivitis) எனப்படும் கண் இமைப்படல அழற்சி வரலாம். இது எளிதாக பிறருக்கு பரவக்கூடிய நோய்த் தொற்றாகும். இதனால் கண்களில் நீர் வடிதல், அரிப்பு, எரிச்சல் ஏற்படும். கண்கள் சிவந்து போகும். வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசும். ஆனால், இதனால் கண் பார்வைக்கு பிரச்னை ஏதும் ஏற்படாது. பெரும்பாலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மெட்ராஸ் ஐ இருக்கும் நேரத்தில் மட்டும் பார்வை கொஞ்சம் மங்கலாக இருக்கும். மெட்ராஸ் ஐ காரணமாக அதீத பிரச்னை இருந்தால் மட்டும் மருத்துவரை அணுகலாம். தேவைப்பட்டால் கண்ணுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம். மற்றபடி பயமொன்றுமில்லை. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் கண்களில் தேய்த்த கைகளை படிக்கட்டு பகுதிகள், கதவுகள் போன்றவற்றில் வைக்கும்போது அதனை தொடும் பிறருக்கு இயல்பாக இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். இதற்கு தனி மனித சுகாதாரம் மிக அவசியம். தங்கள் உடைகளை தனிப்பட்ட முறையில் சுத்தம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் குளிர்கண்ணாடிகள் அணிய வேண்டும். அசுத்தமான குடிநீரில் வைரஸ் அல்லது பாக்டீரியாக்கள் வேகமாக பரவும். இவற்றால் பாதிப்படைந்த குடிநீர்; மற்றும் உணவினை உட்கொள்வதன் காரணமாக வாந்தி, பேதி போன்ற வயிற்றுக்கோளாறுகள் ஏற்படலாம். சம்மர் டயரியா (Summer Diarrhea) என்ற பிரச்னை வரலாம். பொதுவாக கோடையில் ஒரு மழை வந்த உடன் ஈக்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கும். அதனால் பாக்டீரியா அதிகமாக பரவும். அதனால் காய்கறி மற்றும் பழங்களை சுத்தமாக கழுவிதான் பயன்படுத்த வேண்டும். பொதுவாகவே இந்த சமயத்தில் தூய்மையான குடிநீரையே பருக வேண்டும். அதிக அளவில் நீரை பருக வேண்டும். காரம் மற்றும் மசாலா பொருட்களை தவிர்க்க வேண்டும். பாக்டீரியாக்களால் டைபாய்டு, காலரா போன்ற பிரச்னைகள் தோன்றும். காலரா பிரச்னை தற்போது குறைந்திருக்கிறது என்றாலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியாக பாதுகாக்கப்படாத (பிரிசர்வ்) செய்யப்படாத பால் பொருட்கள் அதாவது கோவா, ஐஸ்கிரீம், மில்க் ஷேக் போன்ற பொருட்களை இந்த சூழலில் தவிர்ப்பது நல்லது.இந்த சமயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி சின்னம்மை, தட்டம்மை போன்றவையும் ஏற்படும். குறிப்பாக இந்த தட்பவெப்பம் டிக்ஸ் எனப்படும் நோய்க்கிருமிக்கு உகந்த கால கட்டமாகும். வறண்ட வெயிலிலும், கடுமையான மழையிலும் இந்த கிருமியால் இனப்பெருக்கம் செய்ய இயலாது. எனவே, கோடை மழைக்குப் பிறகான இந்த சூழல் அதற்கு இனப்பெருக்கம் செய்ய உகந்த சமயமாக இருப்பதால் இந்த சமயத்தில் தான் அந்த கிருமி அதிக அதிகம் பல்கி பெருகும். கோடை விடுமுறையின் காரணமாக பல்வேறு ஊர்களுக்கு நாம் பயணம் செய்வோம். அங்கே விடுதிகளில் தங்க வேண்டி இருக்கும். அசுத்தமான படுக்கை விரிப்புகள் போன்றவற்றில் இந்த கிருமிகள் அதிகம் இருக்கும். இந்த கிருமியினால் உடலில் அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படும். அதனால் நாம் தங்கும் விடுதிகள் தரம் வாய்ந்தவையாக சுகாதாரமானவையாக இருக்கிறதா என்பதை தெரிந்து தங்க வேண்டும். வீட்டுப் படுக்கைகளையும் வெயிலில் உலர்த்தி தூய்மையாக பாதுகாக்க வேண்டும். மொத்தத்தில் கோடை காலத்தில் வரும் நோய்கள் பெரும்பாலும் கோடை மழைக்குப் பின்னர்தான் அதிகமாக வரும். எனவே, இந்த காலகட்டம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சமயமாகும். – சக்தி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi