கல்வராயன்மலை, ஜூன் 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இதில் பல விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடி செய்தனர். தற்போது கோடை காலம் என்பதால் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி கருகும் நிலை இருந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் மற்றும் கடுமையான வெப்பத்தின் தாக்கம் காரணமாக மரவள்ளி, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் கடும் வறட்சியில் கருகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சத்தில் இருந்தனர்.
ஆனால் அக்னி நட்சத்திரத்தின்போது மாலை நேரங்களில் தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வானம் மேகமூட்டமாக இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஒரு சில பகுதிகள் கனமழையின் காரணமாக விவசாய இடங்களில் தண்ணீர் தேங்கியும் சில இடங்களில் ஈரப்பதமாகவும் உள்ளது.இதனால் தற்போது மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பசுமையாக செழித்து வளர்ந்து காட்சி அளிக்கிறது. குறிப்பாக மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், மற்றும் மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் தற்போது பச்சை காட்டி செழித்து காணப்படுகிறது. இந்த ஈரப்பதமே மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் அறுவடை வரை தாங்கும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.