Monday, February 26, 2024
Home » கோடை நோய்களைத் தடுப்பது எப்படி?

கோடை நோய்களைத் தடுப்பது எப்படி?

by kannappan

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?வியர்க்குருமனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வசாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் காலமின் லோஷனைப் பூசினால் அரிப்பு குறையும்.வேனல் கட்டிதோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல் கட்டி. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.பூஞ்சை தொற்றுஉடலில், ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவிவர இது குணமாகும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும்.நீர்க்கடுப்புகோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.தொற்றுநோய்கள்வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய்க்கிருமிகள் அபரிமிதமாகப் பெருகும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகையால், வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம். தண்ணீரைக் கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.வெப்பத் தளர்ச்சிவெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடலின் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும்; களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது.வெப்பமயக்கம்நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்கிறவர்கள், திடீரென மயக்கம் அடைவதைப் பார்த்திருப்பீர்கள். இது ‘வெப்ப மயக்க’த்தின் விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது; இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து, ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை; இவற்றின் விளைவாக மயக்கம் வருகிறது.வெப்பமயக்கத்துக்கு முதலுதவிமயக்கம் ஏற்பட்டவரை குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்குக் கீழே படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்யுங்கள். தலைக்குத் தலையணை வேண்டாம். பாதங்களை உயரமாகத் தூக்கிவைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்கவும். இது மட்டும் போதாது. அவருக்குக் குளூக்கோஸ் மற்றும் சலைன் செலுத்த வேண்டியதும் முக்கியம். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.தண்ணீர்! தண்ணீர்!சென்னை போன்ற நகரங்களில் காற்றின் ஈரப்பதம் (Humidity) மிக அதிகமாக உள்ளது. உடலில் ஏற்படும் வியர்வைச் சுரப்பு உடனடியாக ஆவியாகாது. எனவே, உடலின் வெப்பம் குறையாமல் இருக்கும். அதே நேரத்தில், வியர்வை சுரப்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அளவில்லாமல் வெளியேறி, அதிக நீரிழப்பு ஏற்படுகிறது.இதனால், உடல் தளர்ச்சி அடைகிறது; களைப்பு உண்டாகிறது. இந்த நிலைமையைத் தவிர்க்க, மணிக்கொரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால்கூட, தாகம் எடுக்கவில்லை என்றாலும், கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.குளிர் பானங்கள் வேண்டாம்!வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள் மற்றும் குளிர் பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர் பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.இதற்குப் பதிலாக, இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன. எலுமிச்சைப் பழச் சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.பழங்களை அதிகப்படுத்துங்கள்தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கப் பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.எண்ணெய் தவிர்!கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றையும் தவிர்ப்பதே நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.சிறந்த கோடை உணவுகள்இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக் கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள்.மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி சூப், தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர் விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும், தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.வெயிலில் அலையாதீர்!கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது. முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு ‘சன் கிளாஸ்’ அணிந்து கொள்ளலாம்.ஆடையில் கவனம்உடைகளைப் பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே. அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தைக் கிரகிக்கும். ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். வெந்நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவை. சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் ‘சன் ஸ்கிரீன்’ களிம்பை முகத்திலும் கைகால்களிலும் பூசிக்கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

eighteen + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi