தர்மபுரி, மே 24: பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்து மண் வளத்தை பாதுகாத்து பயன்பெற வேண்டும். கோடை உழவை பயன்படுத்தி, மண்ணை புழுதி நிலம் ஆக்க வேண்டும். அவ்வாறு செய்வதனால் புழுதியானது மண்ணின் மேல் ஒரு போர்வை போல் மூடி, கீழே உள்ள நீர் ஆவியாகாமல் சேமிக்கப்படுகிறது.
மண்ணில் உள்ள பெரிய கட்டிகள் உடைக்கப்பட்டு, நிலம் நன்கு பண்படுத்தப்படுகிறது. இதனால், மழை பெய்வதற்கு முன்பே பருவ விதைப்பு மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கோடை உழவு செய்வதனால் மண் அரிப்பு ஏற்படாமல் மழைநீர் முழுவதும் உறிஞ்சப்படுகிறது. மண்ணில் மறைந்து வாழும் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சி இனங்களின், கூண்டு புழுக்கள் வெளி கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன.
இதனால், பூச்சி -பூஞ்சான நோய் தாக்கத்திலிருந்து அடுத்து பயிரிடப்படும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், மண் அரிமானம் தடுக்கப்படுவதோடு மண்ணில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படுகிறது. மழை நீரும் சேமிக்கப்படுகிறது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் தற்போது கோடை உழவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.