மார்த்தாண்டம், ஆக.31: திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர், பேயோட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (58). தொழிலதிபர். கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் புகுந்து மோகன்தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிவிட்டு 79 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மானுகொண்டா என்ற அனு குமார் (34), விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பார்த்திபன் (23), திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (38) ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த 23ம் தேதி கைது செய்தனர். இந்த சம்பவத்தில் திறம்பட செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்துள்ள குமரி மாவட்ட தனிப்படை போலீசாரை தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வரவழைத்து பாராட்டினார். மேலும் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கியும் கவுரவித்தார்.
கொள்ளை கும்பலை பிடித்த தனிப்படை போலீசாருக்கு டிஜிபி பாராட்டு
previous post