கொள்ளிடம், ஜூன் 7: கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் குறைந்து வருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி குப்பைகள் அதிகம் உள்ள பகுதியாக இருந்து வந்தது. கோபால சமுத்திரம் மற்றும் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிகள் கொள்ளிடத்தில் முக்கிய பகுதியில் இருந்து வருவதால் தினந்தோறும் குப்பைகள் அதிகமாகிக் கொண்டே வந்தன. மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் ஒன்றாக கலக்கப்பட்டு கண்ட கண்ட இடங்களில் குவியல் குவியலாக கொட்டப்பட்டு சுற்றுப்புற சுகாதாரத்தை பெரிதும் பாதித்து வந்தன. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வழக்கம் போல இடம் தேர்வு செய்யப்பட்டு குப்பைகள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டு கொட்டப்பட்டு வந்தன. இதனால் கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் இல்லாமல் இருந்தது.
பின்னர் ஆற்றின் கரையோரம் இடம் தேர்வு செய்யப்பட்டு கொட்டி வந்த நிலையில், குப்பைகள் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதித்து வருவதாலும் கொள்ளிடம் ஆற்று நீரை மாசுபடச் செய்யும் என்பதாலும் கரையோர கிராம மக்கள் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் நீர்வளத் துறை சார்பில் ஆற்றின் கரையோரம் குப்பைகளை கொட்டுவதற்கும் தடை விதித்தனர். குப்பைகளை ஆற்றின் கரையோரம் கொட்டக்கூடாது என்றும் விளம்பர பலகையும் வைத்தனர். இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டது. வேறு உரிய இடம் தேர்வு செய்யாமல் இருந்து வந்ததால் குப்பைகள் முக்கிய இடங்களிலும் கண்ட கண்ட இடங்களிலும் குவியல் குவியலாக குவிந்து கிடந்தன. இந்நிலையில் குப்பைகளை அகற்றி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சிகள் தனி கவனம் செலுத்தி தீவிர முயற்சியில் இறங்கின.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளிலும் இரவு நேரங்களில் தீயிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் அவைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பைகள் கொள்ளிடம் பகுதியில் குவியல் குவியலாக இருந்து வந்த நிலையில் தற்போது குப்பைகள் பெரும்பாலும் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருவதால் கொள்ளிடம் தூய்மையாக இருந்து வருகிறது. மேலும் குப்பைகள் சேராத வண்ணம் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தூய்மை பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும் குப்பைகளை அரைத்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் கொள்ளிடம் பகுதியில் புதிய நவீன இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் பகுதியில் குப்பை குவியல்கள் குறைந்துள்ளதால் பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்பட்டுள்ளது.