கொள்ளிடம்,செப்.3: கொள்ளிடம் அருகே வடகால் செல்வவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேக தின விழா நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடகால் அரண்மனை தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சம்வஸ்ரா அபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு செல்வ விநாயகர் ஆலயத்தின் முன்பு யாக சாலை அமைக்கப்பட்டு ஆச்சாள்புரம் சம்பந்த ம் சிவாச்சாரியார் தலைமையில் யாக பூஜை நடைபெற்றது.
யாகத்தில் புனித நீர் அடங்கிய கடங்கள் பூஜிக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி வளம் வந்து புனித நீரால் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் , சந்தனகாப்பு அலங்காரம், மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மணிவண்ணன் மற்றும் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.