ராமநாதபுரம், அக்.6: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விதைகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் துரைக்கண்ணம்மாள் தெரிவித்தார். ராமநாதபுரம் அரண்மனை பஜாரில் விதை நெல் விற்பனை மையங்களில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் துரைக்கண்ணம்மாள், வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விதை ஆய்வு துணை இயக்குனர் துரைக்கண்ணம்மாள் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 224 விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு என்.எல்.ஆர், பி.பி.டி, ஜோதி மற்றும் ஆர்.என்.ஆர் போன்ற நெல் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பிபிடி நெல் ரகத்திற்கு, இந்தாண்டு அதிக தேவை இருக்கிறது.
எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி விதை விற்பனையாளர்கள் கொள்முதல் ரசீதில் பெறப்பட்டுள்ள எம்.ஆர்.பி விலையை விட அதிகமாக விற்பது, இருப்பு வைத்துக்கொண்டு விவசாயிகளை அலைக்கழிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் விற்பனை நிலையங்களில், விதைகளின் விதையை விவசாயிகள் தெரிந்துக் கொள்ளும்படி விலை பட்டியலை எழுதி வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது விதை ஆய்வாளர் ஜெயந்தி மாலா, வேளாண் அலுவலர் தமிழ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.