பாடாலூர்,செப்.13: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்களான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் தணிகாசலம், மனநல மருத்துவர் சுதா, கண் மருத்துவர் அருண்பாலாஜி, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சரண்யா, குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்தனர்.
முகாமில் பிறப்பு முதல் 18 வயதுடைய 5 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும், 16 மாற்றுத்திறன் கொண்ட பெரியவர்களும் கலந்து கொண்டனர். இதில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறுப்பு பயிற்றுநர்கள் ஜெயமேரி, ஜோஸ்பின் கிளாரா, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) சரவணன் நன்றி கூறினார்.