சேந்தமங்கலம், மே 28: நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(49). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம், நாமக்கல்லில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு, கொல்லிமலை செம்மேடு பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் பொருட்களை இறக்கி விட்டு, பிரதான மலைச்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தார்.
51வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வனப்பகுதியில் உள்ள 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது. பின்னர், அங்குள்ள மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில், சேகர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.