கரூர், ஜூன் 7: கரூரில் மருத்துவ குணம் கொண்ட அன்னாசி பழம் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. கரூர் மாநகராட்சி பகுதிகளில் சீசனுக்கு ஏற்ப மா, பலா, தர்ப்பூசணி, பிளம்ஸ், நீர் ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்கள் மொத்தமாக லோடு ஆட்டோக்களில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மற்றும் கேரள மாநில பகுதிகளில் இருந்து வியாபாரிகளால் கொண்டு வரப்பட்ட அன்னாசி பழங்கள் கரூரில் அதிகளவில் கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், 3 பழங்கள் ரூ.100 என்ற அடிப்படையில விற்பனை செய்யப்பட்டன. உடலுக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட பழம் குறைவான விலைக்கு விற்றதால், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.